சிறகுகள் முளைக்க சிதறிய கூடாய்...

சிறகுகள் முளைக்க சிதறிய கூடாய்

விறகில் கரியாக வளரும் காடாய்

உறவுகள் திரியாக எரிக்கும் கூடாய்

இருளும் எரிகின்ற இரவுக்காடு


வாசல்கள் விழித்திருக்கும் அந்த 

வானிடிந்து விழ்தல் காண, - வானிடிந்து 

வீழ்கையிலே கூரைகளுக்கு இடமாற்றம், 

வாசல்படி திண்ணையெல்லாம்

குருதி கலந்த மண்வாசம் 


போரில் அமைதி தேடும் சமாதிமரங்கள்

போர்கண்ட நிலத்திலே வேர்விட்டு விட்டு எம்

இலைகளில் துப்பாக்கித்துளைகள்,

கிளைகளில் சன்னத்தின் சுவடுகள்.


சன்னம் துளைக்க சன்னம் துளைக்க,

குபீர் குபீர் என குருதி கொதிக்க

காற்றின் காதுகள் கிபீர் கிழிக்க 

அமைதியாக ஒரு வன்முறை வெடித்துச் சென்றது.


மேகம் தொலைத்த மழையும்,

மழைஈரம் தொலைத்த குளமும்,

நதிகள் தொலைந்த நிலமும்,

பதிகள் தொலைய பாதி வாழ்க்கைப்

பொதியை சுமக்கும் போரை மணந்த

சுமங்கலிகளும் சுமந்த பூமி.


ரௌத்திரம் பழகும் நிலமும் வானும்

குருதிச்சாரல் மழையில் கலக்கும் -

கண்ணீர்மழை மேகங்கள் நிலத்தை முட்டும்

போர்கள் சுமக்கும் நிலத்தை சுமக்க

புதைகுழிகளில் சென்று படுத்துக்கொண்டோம்...

-சி.சதுர்










Comments

  1. தற்குறிப்பேற்ற அணி இவ்வளவு சரளமாக எங்ஙனம் வருகிறது?

    ReplyDelete
    Replies
    1. அனுபவங்களின் வெளிப்பாட்டில் அணிகளின் பயன்பாடு.... இயைபு

      Delete

Post a Comment

Popular Posts