புத்தகங்களுக்குள்ளொரு போர்க்களம்
வரிக்கு வரி வியர்வைத்துளிகளால் முற்றுப்புள்ளி
பக்கங்களுக்கிடை மறுப்புகளின் மடிப்புக்கள்
பழுப்பேறிய தாள்களுக்குள் அமைதியாக துடிக்கும்
விழுப்புண் தாங்கிய என் எண்ணங்கள்...
சாலையோரம் நடந்து செல்கையிலே
புது பக்கங்களை சேகரிக்கிறேன்.
மாலைநேரம் பாதை கடந்து செல்கையில்
மாலைக்குருடன் மேற்கைக் கடக்க அவன் கரம்பிடிக்கிறேன்.
மேற்கின் பக்கங்கள் மூடவே வானக்கதவருகில் வட்டநிலா...
காலடி ஓசைகளாய் வரிகள் வந்து விழுகையிலே
ஒவ்வொரு தடமும் ஒரு இடம் தேடி ஓடுவதால்,
என் வரிகளின் தடங்கள் முட்டிக்கொள்வதில்லை.
வரிகள் ஒவ்வொன்றும் வலிகளின் வழிகளாய்
விரிவதால் எழுத்துக்களில் முட்கிரீடங்கள்...
திறவாத பக்கங்களின் வாசத்தோடு,
திறவுகோள்கள் தொலைத்த வசனவாசல்கள்
மறவாமல் விதைத்த வரிகள் மனதுள்
இறவாமல் முளைத்தன முல்லைப்பூக்கள்,
சொற்கள் சுமக்கும் முல்லைப்பூக்கள்,
கற்கள் சுமக்கும் எல்லைப்பூக்கள்,
களங்கள் சுமக்கும் குருதிப்பூக்கள்,
காயங்கள் சுமக்கும் இறுதிப்பூக்கள் - என்றே
பூக்களின் காவியங்கள் புதைந்த பக்கங்கள்...
பக்கங்களுக்கிடையே பந்திகளில்
பனிப்போர், கருத்துக்கணைகள்
களத்தில்வெடிக்க, எழுத்து வில்லில்
எண்ணங்கள் நாணேறின,
எழுதுகோல்கள் அழுத சிதைகளில்
எழுத்துக்கள் விதைக்கப்படும்வரை...
என்னுள் விதையாயிருந்த தமிழ்ப்பற்றை நீரூற்றி தருவாய் வளர்த்துள்ளது தங்கள் கவிகள்.
ReplyDeleteஅத்தருவின் நிழலிலேயே இக்கவியின் கருக்கள் உருவாகின்றன. நன்றி
ReplyDelete