வார்த்தைகள் திருடிவிட்டாய்...

நிலவைக்காணவில்லை, என்

நீலவானம் விதவைக்கோலத்திலே

வாடும் நேரம் நிலவைக் காணவில்லையே!

தொடுவானத்தின் திரும்பலில் 

காத்திருந்தேன் நிலா வருமென...

சுடுவெயிலை தலையிலே சுமந்து

காத்திருந்தேன் நிலா வருமென...


உடலும் ஓரிடத்தில் 

உறைந்தே காத்திருக்க - என்

நிழலோ சுடுவெயிலின் சுவடாய்

படர்ந்து கொண்டே நிலவின் நிழலைத்

தேடுதே, செந்தழலோடு எரியும் சிறுகொள்ளி நான்,

அந்த நிலவின் பாதையில் 

காத்திருந்தேன் காற்புள்ளியாய்...


பாதைமனிதரெல்லாம் மின்மினிகளாய்

கடக்கையிலே, பால்நிலவின்

பாதம் மட்டும் இந்த பாதை அறியவில்லையே

உதயம் தெரியவில்லையே, ஊமைவிழிகள்

அளந்த பாதையில் உன்னைக் காணவில்லையே...

நிலவு மறைந்து விட்டது, வானம் கரைந்துவிட்டது.

நான் நிலவைத் தொலைத்த வானம்...


என் கனவில் கலைந்த மேகம் - அவள் 

என்னில் விதைத்த சோகம் - மனம்

மண்ணில் புதைந்த பாகம்...  என்

கண்ணில் விழுந்த பிறை நீ, என்

கனவில் வந்த பிழை நீ,

கவிதைசிற்பி வடித்த சிலை நீ.

மலைதாங்கும் இதயம் 

மலர் வீசி உடைத்தாயடி


நீ வரும் வழி பார்த்திருந்தேன் - நீ

தரும் வலி அறியவில்லை, நிலவின் 

முகம்காணக் காத்திருந்தேன் நிலவு

அகம்காணாமல் போனதேனோ?

என் வானத்தில் இடமளித்தேன் 

வெளிச்சத்தை திருடிக்கொண்டாய்

என் கவிதையில் இடம்கொடுத்தேன் - என்

வார்த்தைகள் திருடிவிட்டாய்...


நான் குடையாகக் காத்திருந்தேன் 

நீ மழையாக வருவாயென நினைத்தேன்

புயலாக வந்தெனை பூப்போல பிய்த்தெறிந்தாய். 

பூவுக்குள் ஒளிந்திருந்த பெரும்புயலாக நீ, 

உன் சுழலில் ஆடும் மரமாக நான்,

கவிதை எழுதி கரையும் எழுதுகோலாக நான்

வரிகள் உதித்திடும் வெண்தாளாக நீ.

வலிகள் பதித்திடும் உளியாக நீ,

சிலையொன்றால் செதுக்கப்படும்

சிறுபாறை நான்...


-சி.சதுர்

Comments

  1. அற்புதமான படைப்பு !

    ReplyDelete

Post a Comment

Popular Posts