மௌனம் சுமந்திடும் வார்த்தை...

கரைகள் உடைத்திடும் நீராய் கண்கள் நடத்திடும் போராய்

கனிமொழி கொண்டு, கவிவரி நெய்திடும் காலத்தாளின் நூலாய்

விழிகளில் விழுந்திடும் வேலாய், விண்மீன் பூக்கும் காடாய் 

அந்நிலாமுகம் தொழா மேகக்குடை விரித்திடும் வானாய்.


விழா நிலா எனைத் தொடா, விழல்தலை நிலத்திலா

விடாக் கனா நினைவிலா, விழும்வரை பறப்பேனோ...

கொடா தவள் குணத்திலா, கொடும் சுமை மனத்திலா

எழா தவன் பிணத்திலா, சுடும் தழல் சுமப்பேனா...


எழுதுகோல் தொலைந்திட, எழுந்தது ஓர் ஓவியம்- நான்

உழுதிட்ட வரிகளில் முளைத்தவள்  காவியம்.

நதிவிழும் நிலம், நனைந்தது மனம். 

நீர்க்கண் மூடிட நிறைந்தது குளம்...


நிரம்பா ஆசைகள் வரம்போல் வந்தாய் நிரப்பிட

திரும்பா நொடிகளை திருடிச் சென்றாய்,

அரும்பா விடியலை அணைத்திடவே 

துரும்பாய் நிலவு தவிக்கிறதே ...


வானம் பிளந்திடும் மீன்கள் விழிகளில் 

மௌனம் சுமந்திடும் வார்த்தைத் துளிகளில்

மேகம் மிதந்திடும் வனமாய் மனமோ ஆனதென்ன?

காட்டுமலரே கருணை மொழியொன்று பூத்தாலென்ன... 


காற்றை விழுங்கி கவியொன்று சுவாசித்தேன்

அந்த கவிவரிகள் உன்னைத்தான் சுவாசிக்கின்றன

நேற்றை விழுங்கிய என் நாட்குறிப்புகள்

ஊற்றாய்ச் சுரக்கும் உன் நினைவுகளை...


மேற்கே ஓர் ஒற்றை நிலவு நடந்து போகையில், 

கிழக்கில் குதித்தேன்

கீழ்வானின் மறுபுறம் சந்திப்போமென்றே, - அவள்

வான்வெளி ஓடம் வானைக் கிழித்துச் சென்றாள், 

விழிவாளின் ஓரம் என் வார்த்தை  அழித்துச் சென்றது...

-சி.சதுர்


Comments

  1. அற்புதம்!

    ReplyDelete
  2. நெல்லைத்தாங்கும் பயிர்போல தங்கள் சொல்தாங்கி தலைவணங்குகிறேன். நன்றி

    ReplyDelete

Post a Comment

Popular Posts