சின்னஞ்சிறு நிலவே
வானமுகிலிடை நிலா, அவள் வந்த நொடிகளில் விழா
மனதின் வெளியிடையிலா மௌனத்துளிகளின் உலா.
காணும் விடியல்கள் அவை காலக்கடிதங்கள்.
கடித வரிகளில் காந்த உரசல்கள்...
கூடுகள் பறப்பதில்லை, குருவிகள் இடம்மாறின.
காடுகள் சுமந்த வழி கால்கள் தடம்மாறின
ஒரு மின்மினி உரசிட எரிந்தது காடு
அதில் மூங்கில் விறகாக எரியும்கூடு
பகலை வடித்து இரவுக்கோர் பொட்டு
துகல்கள் வெடித்திடும் நட்சத்திர மொட்டு
சொற்களை நம்புவதில்லை, இங்கு நான்
முற்களை கோர்க்கிறேன் மலரொன்றை மறந்திட...
அலைமனம் அலையும் தினம் அந்த அடிவானை
அணைக்கும் வரை, மலைகள் என் மனதில்
மத்தளம் கொட்ட முகில்வந்து முத்தமிட்டது நிலவை.
சின்னஞ்சிறு நிலவே நீ மறைந்துகொள்ள என்
வானம் தருவேன், உன் நாணப்பூக்கள் கொய்ய
பாணம் விடுவேன்...
அந்திவானில் உன் நிழல் வீழ என்
வானம் சிவக்கிறது, வானம் கனல்கையிலே
தீக்குளம் ஓடிடும் மீனாக நானிருக்க
நீ வந்தாய் தூண்டிலோடு நிலவே
தூண்டிலில் மாண்டிடவே மீன்கள் துடித்தன...
மொட்டுகள் நிறைந்த குளத்தில்
என்விழி இடரிடும் முதல் மலர், அது
மலரிடும் நேரம் மனவோரம் மழைக்காலம்.
புயல்வரும் முன் திரும்பிக்கொண்டேன்...
புத்தி தெளிந்தேன் நிலவே உனைத் தேடியே
எத்திக்கும் விழிகளை ஏவியே நான் திரும்பிட
மறைந்து சென்றாய், விழிகளில் பனிமூட்டம்
நீ விலகிட உடைந்ததே ஆணின் நீர்க்குடம் விழிகளில்...
சிட்டொன்று முட்டுகிறது விழிமலரை
தேன் வந்து கொட்டுமென்றா?
தேங்கிய என் தேடல்கள் கொட்டிடவே
சின்னஞ்சிறு நிலவே உன் சிறுகை கேட்கிறேன்...
"ஒரு மின்மினி உரசிட எரிந்தது காடு" இவ்வரியில் மெய்சிலிர்தது....தாகத்தை தணித்துவிட்டன இச்சுவையான வரிகள்.
ReplyDeleteநண்பா, உங்கள் கற்பனைத்திறன் நிலவைப்போன்று இயற்கையாக ஒளிர்கிறது, சிரமமின்றி.🌖
நன்றி நண்பா
ReplyDelete