இலையுதிர் காடு...

இலையுதிர்காடு, 
கிளைமயிர் உதிரும் காட்டுக்கிழவனின்
கைத்தடிமரங்கள்.
நகம்சுடும் நிலச்சூடு, நகரா 
வெறுமையுள் நத்தையின் மேலோடு.
மேகம் நடும் மழைமரங்களின் 
மறைவினில் மதங்களின் மாநாடு.

காக்கை குருவியின் ஜாதி போல்
இறக்கையில் சுமக்கிறோம் வலிகளை
யாக்கை உருகி பாதியாய் வழிந்திட 
இறகுகளில் கொள்ளிக்கட்டைகள் 
சுமக்கும் அக்கினிக்குஞ்சுகளாக...

எந்தை சுமந்த நிலம், நான் தொடவே
கந்தை வெளுக்கும் வெள்ளாவியாக
கைவிரல்களுள் புகுந்திடும் வெம்மணல்ப்புழுதி...
வெம்மையை விதைத்துச் சென்ற நிலம்
பாத வெடிப்புகளை நகல் எடுத்துக்கொண்டது...

கட்டாந்தரை,
கண்ணீர் விழுந்தே களிமண்ணாகிட
புற்றுமண் சரியவே புலம்பெயரும் 
கறையான் கூட்டமானோம். - எம் காயங்களை
சுமப்பதால் காற்றினில் குருதி வாடை...

இளவேனில் காலத்தை வானம் திரையிட 
கைத்தடிமரங்களில் சிறு அசைவு...
கரும்புக்காட்டில் ஊறும் கட்டெறும்புகளாய்
வெயில் குடித்த நிலங்களில் ஊறுகின்ற பச்சை

வானங்கள் மாறவே மாற்றலாகிவந்த 
மேகமே, நெருப்புக்குளத்தில் நீர்ப்பூவாய் 
கானல் அலைகளில் நீந்தும் முகில்கூட்டமே, வானம்
பார்த்திருக்கும் நிலத்திற்கு எம் கண்ணீர் போதவில்லை
வந்து கொஞ்சம் எமக்காக அழுதுவிட்டுப்போ...

மௌனங்கள் சுமந்து வண்ணங்கள் சுகப்பிரசவிக்கும்
மலர்கள் காணவே கொஞ்சம் அழுதுவிட்டுப்போ
வேலிகளில் காயும் போர்க்காயக்குருதி பிசுபிசுக்கும்,
வேலிகள் உயிர்களை மேய்ந்ததால் -ஆம்
அதற்காக கொஞ்சம் அழுதுவிட்டுப்போ...

தூளிகளில் துப்பாக்கிகள் உறங்குகின்றன,
தோட்டாக்களுக்கு கேட்காதவண்ணம் 
ஒருமுறை அழுதுவிட்டுச்செல்...
உழுத நிலங்களில் உதிரத்தின் ஈரம் போதவில்லை
அழுதுவிட்டுப்போ...


-சி.சதுர்

Comments

  1. சாலச்சிறப்பு 👏

    ReplyDelete
  2. வெம்மையை விதைத்துச் சென்ற நிலம்

    பாத வெடிப்புகளை நகல் எடுத்துக்கொண்டது... ✨️♥️





    ReplyDelete

Post a Comment

Popular Posts