தொலைந்த தொடுவானம்
பூக்கள் தேடிடும் விழிகள்,
புன்னகைக்கோடிடும் இதழ்கள், அவள்
புல்லின தேசத்து இறகுகள் மோதியே
மேகப்பந்திலே துளைகள்.
மின்னல்கள் முளைக்கின்ற
கன்னக்குழிகளால் என் வானத்தில்
தினமும் வெட்டுக்காயங்கள், - என்
இமைகளும் இடிதாங்கிக்கொள்வதால்
கண்மணிகளில் மழைச்சாரல்கள்...
ஒரு உலகம் உள்ளே உறங்கிடும் வேளை,
மன உளிகள் ஓரங்கள் செதுக்கிடும் வேளை,
எழும் வலிகளை விழிகளும் ஒதுக்கிடும் போதே
விழும் துளிகளை விழுங்கிடும் தலையணையாக...
வால்வெள்ளிகள் விழுந்திட எரிந்திடும்
கனாக்குளம், கனாக்குளம் உடைந்திடும் கணம்
எழுதுகோல்களில் கண்ணீர் ஊற்றிக்கொள்ளவே
கவிதை வரிகளில் புதுவெப்பம்...
கரைசேரும் கிளிஞ்சல்கள் சேகரிக்கையில்,
கைசேர்ந்த மேன்முத்தைப் போலே
எனைசேர்ந்தாய் எந்தன் நிலவே
உடுக்களில் உன்முகச்சாயல்கள்.
வானம் பூத்திருந்தது, நிலவு வரக்காத்திருந்தது
மௌனம் நேற்றிருந்தது, உன்னால்
மலரினம் வேர்த்திருந்தது. தண்ணீர் தணலுடன்
மோதிட நீர் மலரும் சத்தம், உன் நினைவுகள்
மோதிட மனவெளியிலோர் யுத்தம் ...
உனது பிழைகளால் எனது மனமோ,
உதிரும் இலைகளின் பருவ மொழிகளை
உணரும் இதழ்களை தேடும் தேடும்...
உலரும் மலர்களின் உதரம் உதிர்ந்திட
உலகம் சுருங்கிடக் கூடும் கூடும்...
புலரும் நொடிகள் உரைந்த
பனித்துளிகளில் அந்த வானம் வீழுதே
தலைகீழாய், மலரும் வானத்தை
நிலவும் தாங்கிட, நிலவைத் தாங்கிட
மனமும் ஆனதே தொடுவானாய்.
உன் விழிகளின் வழிகளில்
தொடுவானம் தொலைந்ததால்,
தொலைவிலோர் மேகம் நடுக்கடலில் அழுதிட
உப்பானது கடல்நீரும்...
ஆஹா!
ReplyDelete