மலர்கள் மீண்டும் அழுகின்றன...

கள்ளிப்பூவாய் பிறந்துவிட்டால் கவிஞரின் 
கைகளில் அவலமில்லை - இவர்
கற்பனைத் தோட்டத்தில் சிறையிருந்து,
ஒப்பனை வரிகள் புனையும் அவஸ்தையில்லை.

விற்பனையாகா வரிகளைக் கோர்க்க,
விலைபோகும் பூக்கள் மேல் பரிந்து கொண்டேன்.
தேவைவரின் கொய்தவர் பொய்புனைந்து
பாவை மனம்கவர பூச்சொரிதல் புரிந்து கொண்டேன்.

எடுப்பார் கைப்பிள்ளை போல் மலரே, நீ
தொடுப்பார் கைபிணைந்து, வாசம்துறந்து
வாழ்வுதுறந்து வாடியே நீயும் மோசம் போகிறாய்.
மென்மையாம் தண்மையாம் காம்பின் நுண்மையாம்
எனப்புகழ்வார், நின் இதழ் துவண்டால் கழிவென்று
கசக்கிடுவார்...

செடிகளை அலங்கரிக்கும் பூக்களே! உங்களால்,
கிளைகள் கத்தரிக்கப்படுகின்றன, மொட்டுக்கள்
கிள்ளப்படுகின்றன, சிறுபுள் கட்டிய கூடுகள் 
சூறையாடப்படுகின்றன. செடிகளில் பிறந்து 
செடிகளை காயப்படுத்துகின்றீர்.

அன்பின் அம்பாசடர்களாக உங்களை
தேர்ந்தெடுத்தது யார்? 
ஒரு கன்னத்தில் அறைய மறுகன்னம் 
காட்டும் ஜாதியோ நீ?
காம்புகளை கத்தரிப்பவன் கைகளிலும் 
சிரிக்கிறாய், வாக்குப்பெட்டிகளில் 
ஓட்டுக்கரப்பவன் கழுத்திலும் புரள்கிறாய்.

கருவறையிலும் இருக்கிறாய், கடவுளையும் 
அணைக்கிறாய், காணிக்கை அதிகம் 
தந்தால் கரன்சிகளை அணைக்கிறாய். 
காசின் முன் கடவுளும் அனாதைதானே!

முட்களோடு பிறக்கும் ரோஜாதான், 
பூக்களின் முதல் தீவிரவாதி,
காதலைக் கடத்தி வைத்திருக்கிறது.
அதன் முட்கள் யாருக்கு விசுவாசம்?
மலருக்கு விசுவாமா? மலரோ உதிர்ந்துவிடுகிறது
முட்கள் பாதுகாப்பாக இருக்கின்றன.

மலர்காண மையாத்தி நெஞ்சே...
எனப் பாடியதால் மலர்களுக்குள்
ஒரு தாழ்வுமனப்பான்மை. 
மட்டம் தட்டப்பட்ட  மலர்கள் மீண்டும்
மொட்டுக்குள்ளேயே ஒளிந்து கொண்டு,
காம்பின் கணுக்களிடம் தம்மை உள்ளிழுத்துக்
கொள்ளும் படி அழுகின்றன...
ஆம், மலர்கள் மீண்டும் அழுகின்றன.



-சி.சதுர்





 

Comments

Post a Comment

Popular Posts