தொலைந்து போன கண்ணீர்...
நிலத்தை தடவுகிறேன் நீலம் பாய்ந்து
நரைகள் பூத்திருந்தது - குளங்களில்
குதிக்கப்போனால் கரைகளில்
குறைப்பிரசவமாயிருந்தன மீன்கள்...
காகிதக்கப்பல்களை கடலில் வெள்ளோட்டம்
விடச் சென்றேன், கண்முன் பெட்ரோல்
ஊற்றிக் கொண்டு கடல் தீக்குளிக்கிறது,
தொடுவானத்தில் தீக்காயம்...
நிலத்திலே மனித நகக்கீறல்கள் - எரியும்
கடலில் கட்டுமரமொன்று மிதக்கையில்
துடுப்புகளில் தீப்பற்றிக்கொள்கிறது.
அக்கரையில் அழிவுகள்
ஒடிசாவில் ஒலிக்கும் ரயில்களின்
ஓலங்கள் கேட்டு உறங்கும் பிணங்கள், சிலர்
ஓடுகிறார்கள் உயிர்கள் தொலைந்த
தண்டவாளத்தில் உடல்களைக் காக்க...
மூன்று பாதைகள் இரு பயணங்கள் மோதிக்கொள்ள
இன்று சிதைகளில் எரியும் தீயின் பூக்கள்.
அகிம்சை தேசத்து தண்டவாளங்களில் இரத்தக்கசிவு,
சதைகள் ஏற்றிடும் வண்டிகளில்
சைரன் விளக்குகளின் கூப்பாடு.
கேமராக் கண்கள் வழியே உலகம் உச்சுக்கொட்ட,
பத்திரிகை அச்சுகளில் மைக்கண்கள் கசிகின்றன,
வரலாற்றின் காயங்கள் கட்டுப்பிரிக்கப்பட,
இறந்தகால இறப்புகள் ஒப்பீடு செய்யப்படுகின்ற்ன...
மறந்துபோன புள்ளிவிபரங்கள், அணைந்துபோன
கொள்ளிக்கம்புகள் தூசிதட்டப்படவே, உதிரும்
சாம்பல் தரவுகள்; சாவின் தரவுகள் தட்டச்சு ஏறின.
தேம்பும் கூட்டத்தில் தொலைந்து போன கண்ணீர்கள்...
நண்பா, அருமை! எந்தவொரு கலையை ஆற்றினாலும், நுகர்பவர் மத்தியில் இரசத்தை உண்டாக்க வேண்டியது அக்கலைஞரின் அடிப்படை தேவை. அந்த வகையில் ஒரு கலைஞராக வெற்றியடைந்துள்ளீர். வாழ்த்துக்கள்.👏
ReplyDelete😇👍
ReplyDelete