பொன்சாய் மனிதர்கள்

நேரத்துடன் மோதிக்கொண்டது நினைவின் நிழல்,
ஈரம் மறந்து சருகாய்க் காய்ந்திடும் மேக நிழல்,
நேற்று எரிந்த விடியலின் தணலின் சோகத்தில்
வானம் மௌனம் பூக்கிறது?

வானநுதலில் சோக வரிகள்,
ஊமைக்குயிலின் தாகக் குரல்கள் ,
மௌனத்தாயின் மொழியில் வலிகள்,
அமைதி சுமக்கும் ஊமைவிழிகள்.

நிலவின் நிழலைத் தேடும் விழியின்
வரிகளில் வார்த்தைகளின் பயணம், 
தரிகள் கோர்த்திடும் நூல்போல் 
கோர்வையாய் இழைத்திட ஏங்கும் குரல்...

மனதின் மேடை, அங்கு மௌனத்திரைகள்,
குரல்நாண் மீட்டிடும் நிசப்த ஸ்வரங்கள்.
உலகின் காதுகள் கேட்டிட, இந்த ஊமையின்
உளறலில் உறங்கும் தூதுகள் .

வறுமையினிற் கொடிது - மனதின்
மடைகள் மோதிடும் வெறுமைக்குரல்,
மௌனப்பேச்சுவார்த்தை மனங்கள் பேசிட
மொழிகள் தேவையில்லை... 

ஊழிக்குதிரை மேயும் போர்நிலம் -நனைத்திட
சமாதான முகில் பெய்த முதல் துளியே
சமத்துவச் சாரல், சமர்க்களத் தூரல்.
போர்பூத்த முதல் பூ - அமைதி...

போர்பிரசவித்த அமைதியை சுமந்த 
இவர்கள் பேசும் விலங்களிடை வந்துதித்த 
பேசாமனிதர்கள்... 
அகிம்சை மொழி பேசிடும் 
பொன்சாய் மனிதர்கள்...







 

Comments

Popular Posts