கட்டுமரமாய் மிதந்திட...
எழுத்துக்களின் அணிவகுப்பில் என்
எண்ணங்களின் வண்ணங்கள்,
இயலாமையின் கூக்குரலில்
ஏறி மிதிக்கும் கோரிகள்,
எம்கைகளில் கோடலிகள்...
அவர் கைகளிலோ சட்டத்தின் துலாக்கோல்,
தூசிதட்டிப்பார்த்தால் தேவையான
சட்டம் அளந்து தரப்படும், -சட்டத்தின்
படிக்கற்களும் ஐந்து வருடம் வாடகைக்கு...
கொழுத்துங்கள் பழமையை என்பார், -இங்கே
கோடுகள் ஐந்தாண்டுக்கொருமுறை
அழிக்கப்பட்டு மீண்டும் புள்ளியிலிருந்து
கிழிக்கப்படவேண்டும்.
எம் கட்டுமரங்கள் அவுஸ்திரேலிய
கடற்கரைகளில் மீளாவுறக்கத்தில்,
பறவைகள் விரிக்கின்றன சிறகை-
யாதும் ஊரே எனக் கூவிக்கொண்டு,
கைவிடப்பட்ட எம் கூடுகள்-
காற்று குடிபுகுந்துகொண்டது.
போரும் அமைதியும் கண்டு,
புயல்வீசி வேர்கள் பிடுங்கப்பட்டு,
வீழும் இடம் இலைகள் உதிர்த்து,
எம் தளிர்களுக்கு வண்ணம் பூசி
வாழப் பழகிக்கொண்டோம்.
கட்டுமரமாய் மிதந்து கரைகள் தேடிடும்
தீவுமனிதர்கள், பரிணாமக்கூர்ப்பில்
எம்மினம் பதிவாகட்டும்
தீவைத் தொலைத்த தீவு மனிதர்களென...
யாதும் ஊரே! யாவரும் கேளீர்!
Comments
Post a Comment