பேனைகள் பேசுகின்றன...

பேனைகள் பேசுகின்றன பேச்சுத்துணையாக 

தாள்கள்- மைத்துளைகள் முத்தமிட்ட இடம் சிவந்து 

பிறந்தன எழுத்துக்கள், துளித் துளியாய் உயிரூற்றிட

வார்த்தைகளுக்குப் பிறந்தன டெஸ்டியூப் வரிகள்.


கனவுக்களஞ்சியத்தில் கருவிருந்த கற்பனைக்

குழந்தைகள் இவ்வரிகள், கண்ணீர்க்குடம் உடைந்திட

விழிமூட்டம் திரையிட விரல்கள் மட்டும் அனுபவித்தன 

பிரசவ வலிகளை, வரிக்கு வரி...


முகவரி தொலைத்த கடிதக்கூடொன்றில் 

அகவரிகள் இழைத்த கவிதைக்காடொன்றை

சுமக்கும் காகிதக்கூலிகளின் ரேகைகளில் -என்

கையெழுத்து... 


பிள்ளைத்தமிழ்க்கவியும் பேசுநறு சொல்லமுதும்

கொள்ளையின்பம் கூட்டுதையே கொஞ்சுதமிழ் பேசிடில்,

நற்றமிழின் சொற்கடலில் நான் வீழ்ந்து போகையிலே

உற்றபொருள் உள்ளமருள் விலக்கிடுதே...


கற்றமொழி காட்டும்வழி- காரிருளில் பாயும் ஒளி, 

மோனக்குயில் என் பாட்டில் மோதிடுதே தோயும் வலி.

உள்ளக்கவி வெள்ளக்கரை உடைந்திட, 

வெள்ளைத்தாள் பூத்தது மைக்கறைகளை.


மெல்லப்புவிக்கறை வெண்மேகம் நனைக்குமா?

மைக்கோல் நிழல்களால் நம் வானம் வெளுக்குமா?

வைக்கோல் பொம்மைகள் எரியும் தெருக்களில்,

செங்கோலின் பொம்மைகள் கைகளில் தீக்குச்சி.


காகிதப்பட்சிகள் கால்களில் கட்சிக்கொடிகள்,

நாளிதழ்ச் சேவல் கூவ, நாடகமனிதர் விழித்தீரோ

ஊடகக்கோழி கொக்கரிக்கும் பூடக சேதிகள்.


போர்க்கால சட்டம் போட்டிருந்த மனதில் 

கார்மேகத்தூரல் பூநட்டுச் சென்றது...

புயல் மேய்ந்த நிலத்தில் பூக்கள் தலைதூக்கிடவே

அயல்நாட்டின் அகதிமுகாம்கள்  அனாதையாயின


நிலம்தொலைத்த வடுக்கள் முதுகில்

களம்கொடுத்த கசைகள் உளம்துளைத்த வசைகள்

ஒவ்வொன்றாய் மறைந்திட, பக்கங்களை

புறட்டினேன் புதிதாய் சில அத்தியாயங்கள்...


அத்தியாயங்கள் புறட்டிட காட்சிகளிலோர்

மாற்றம் கதை தொடர்கிறது, தேர்தல்களை

புறட்டினாலென்ன? ஆட்கள் மாறுமிடம்

நோட்டுக்கள் மாறுகின்றன் நோட்டுக்கள் பாயுமிடம்

ஓட்டுகள் பாய்கின்றன ...

















 



Comments

Popular Posts