ஒளியின் இமைகள்

பூக்கும் நிலவின் புன்னகைச் செலவை
நீக்கும் மின்மினிகள் - யாக்கை எரியும்
சிறகு முளைத்த தணல்க்கொள்ளிகள், இரவின்
மௌனத்தை சுட்டுச் சுட்டுச் செல்கின்றன...

மேற்கில் வெடித்த சூரியனின் கோடித்துகள்கள்,
இரவுக்காட்டில் இருளை கொழுத்திக் கொழுத்தி,
மையிருளில் மிதக்கும் மெழுவர்த்திகள், விடும்
விழிநீர் அடைத்து விக்கி விக்கி எரிகின்றன...

இருள் தழுவும் வானத்தில் கண்சிமிட்டும் 
நிலாப்பொட்டுக்கள், இமை தொலைத்த 
வானத்துக்கு இறகு முளைத்த தோழர்கள்-
மினி விண்மீன் தோழர்கள்...

நான் கோர்க்காமல் போன எண்ணங்கள்
யாவும் கோர்க்கும் காற்புள்ளிகள்,
போர் மூளும் மனக்களத்தில் பறந்து
திரியும் அமைதித் தூதுவர்கள்...

இருளின் தனிமை கிழித்திடும் உங்களால்
காற்றிலே ஒளிச்சாரல், பற்றியெரியும்
கானகத்தில் பரவிய மிதவாத தீப்பிழம்புகள்,
வெறுமையை உறிஞ்சியே வெளிச்சம் பாய்ச்சும்
இரவின் தோட்டக்காரர்கள்...

ஒளியின் இமைகள் இரவின் ஓடத்தில்
மிதக்கிறது, இங்கு எளிய குடில்களும்
உம்மால் மிளிர்கிறது, வலி சுமக்கும்
மனச்சிறைகளின் ஜன்னல் கம்பிகளூடே
எட்டிப்பார்க்கும் ஒளிக்குழந்தைகள்...







Comments

Popular Posts