கண்மணியே உனக்கொரு கவி...
நீளும் சாலையோரம் நீயும் நானும்
சென்றிட வழியெல்லாம் பூத்திடும்
பூக்களில் கிசுகிசுப்பு, நம் நிழல் கோர்த்தே
செல்கையில் நகையாடும் பூந்தோட்டம்.
கண்வைக்குதே பூந்தோட்டம், என் தேவதை
சிரிக்கக் கண்டு, கன்னம் சிவக்கும் செவ்வானம்
அவள் பாதங்கள் மேற்கின் கரையில் அலையாடிட...
சேர்த்து வைக்கும் வார்த்தைகள் எல்லாம் நீ
வாசித்திடவே யாசிக்கின்றேன், காலதேவதை
உன் விழிகளில் என் வரிகளை காட்டும் நொடிநோக்கும்
கவிஞனாய், காத்திருக்கிறேன் கண்மணியே...
சொல்ல மறந்தவைகளின் பட்டியலில்
சேர்த்துக்கொண்டேன் என் அன்பை சகியே,
என் வலிகளை புதைத்திடும் கல்லறையில்
புன்னகைப்பூவொன்றை நட்டு வைப்பேன்.
உன் நினைவுகள் புதைக்கச் சென்று,
எனை நானே புதைத்துவிட்டு திரும்பினேன்.
உன் சாலையின் பெயர்ப்பலகை கடந்திடும்
போதிலே உயிர்த்தெழும் உன் நினைவுகள்...
சொல்லியிருந்தால் நிலவே சுட்டுவிடுவாயோ
என்றே பலமுறை சுட்டுக்கொண்டேன் என் சொற்களை,
பூவே சினம் கொள்வாயென, உனக்கான கவிகளிடம்
தினம் மனம் திறக்கிறேன். சாவியை உன் விழிகளில்
தொலைத்த பின்னே...
என் பேனை பூத்த காகிதப்பூக்களை உன்னிடம்
கொடுத்திட எண்ணினேன், உன் விழிமடலிடமிருந்து
கண்டனக் காகிதம் வருமென அஞ்சியே,
அகக்கடலில் கரைத்துவிட்டேன் காகிதப்பூக்களை...
கடலின் சோகம் என் இதயம் வரை வந்து
கால் நனைத்துச் சென்றது, மஞ்சள் நிலவே உன்னில்
நான் தொலைந்த வழி அறிந்தும் அறியாமல்
காத்திருந்தாய் போல,
என் பாலைவனத்தில் பூத்த கானல்ப்பூவே,
கணநேரம் துணிந்திருந்தால் மடை திறந்திடும்
மனதை சுமந்தே மண்தின்று உயிர்வளர்க்கிறேன்.
கண்மணியே இக்கவியாவது உனை சேர்ந்ததா?
உண்மையில் பெருமை கொள்கிறேன், உங்களை நினைத்து.
ReplyDelete