கல்லறைக்குழி
சிலுவையாய் நினைவுகள் சுமக்கிறேன்
அழுகைகள் அடக்கியே நிறையும் கண்குழி
ஒரு சோடி கண்களை தேடி தொலைகிறேன்
ஒரு நொடி பார்வையால் பிழைக்கிறேன்
இலைநுனி விழும்துளி ஆனேன்
தரைமுட்டி எழும்விதை ஆனேன்
கரைதட்டும் கண்ணீர் அலை ஆனேன்,
திரைதட்டும் அவள் நினைவுகளில்...
அவள் கால்தடம் தொடும் அலையானேன்
அவள் சாயம் தீட்டிடும் மனஓவியம் - அறியாள்
அவள் தந்த காயத்தடத்தில் நீந்துமென்
கவிதை ஓடம், காலம்வரும் அந்நாள் கரைதட்டும்...
பூ பூத்த என் பேனை, பூக்க மறந்ததேனோ?
நீ பூத்த நினைவுகள் அடைப்பதால்
நீர் பூத்த தடங்கள் விழி மடை தட்டுவதோ?
விழிபூத்தே வரட்சி மேகங்கள் விழி மூடுவதோ...
நிறைமாத காத்திருப்பில் வெறுமையின் நிழல்
வேகும் மனதில் வேகா உன் முகம்,
குறைமாத பிரசவம் ஆன உன் ஞாபகங்கள்,
குழிதோண்டிப் புதைத்திட, கவிதைக் கல்லறைகள்.
Comments
Post a Comment