சமூக-விலங்கு

காலங்களின் கால்களில் போர்ச்சங்கிலி,

கடந்து வந்த பாதைகள் எங்கும் காண்கிறேன்

கணை தொட்டு கண்ணீர் தொட்ட சிதைகள்.

சமூக விலங்குகளின் கண்களும் கைகளும்

கைதாகிட, கழன்று கொண்டது சமூகம்...


யுத்த சத்தம் சுமக்கும் காற்றிடை

குயில்களின் ஓலங்கள் ஒடுக்கட்டன,

கரிச்சான் குருவிகள் கழுத்து திருவப்பட்டன,

கூடுகள் குதறியே குஞ்சுகள் நெரிக்கப்பட்டன,

கிளைகள் துண்டாக்கப்பட்டு வேர்களில் 

புதைக்கபட்டன கண்ணிவெடிகள்.


நிலம் அழுத இடத்தில் இரத்தத்தின் ஈரம் - அதை

விழிகள் கழுவிடும் கண்ணீர்கொண்டு,

வேலிகளில் வேட்டுச்சத்தம் அணைந்த பின்னே

தோட்டாக்கள் சேகரிக்கும் சின்ன விரல்கள்.

தோட்டாக்கள், போரின் கால்தடங்கள்-

வன்முறையின் எக்காளங்கள்.


தோட்டாக்கள், உதிர-மையில் 

உதிர்ந்திடும் ஆயுத எழுத்துக்கள்,

உரிமைக்கோரலுக்கு எதிரான

கைத்துப்பாக்கிகளின் வெளிநடப்புக்கள்,

அடக்குமுறைகள் தொடர்ந்திட

ஆங்காங்கே வைக்கப்படும் முற்றுப்புள்ளிகள்... 








Comments

Popular Posts