கீறாத சொல்
தீரா தீரா வரியெனது
ஓரா ஓராயிரம் வலிசுமந்து
மேலா கீழா நிலைமறந்து
வலமா இடமா திசைதொலைந்து
வரமா ரணமா இது - அறியாமலே
வார்த்தைகள் வளர்பிறையாய்.
கீறாத சொல்லெடுத்து கண்மணி
வேறாக வைத்தேன் உனக்காய்,
மாறாத நேயம் வைத்தே தைக்கிறேன்
கூறாத வார்த்தைகள் குறும்பாவாய்
குறும்பாவை கண்முன்னே.
தூறாதோ கண்மணி
உன்வானம் எனக்காய் ஒருமுறை?
வற்றாத மேகங்கள் என்வானிலே
வரையும் முகில்கிறுக்கலில் உன்முகம்.
சிற்றாறாய் ஓடிக்கலக்கிறேன்
உன் நினைவுக்கடலில்.
பற்றியது விழியிரண்டும்
விட்டில் தூணாய் அவள் விழிகள்.
கடற்குளித்த சங்குகள் காதருகில்
காதலியின் காலடி கேட்கும்.
மடற்குளித்த மையின் ஈரத்தில்
மலரும் மையற்கவி உனக்காய்.
மறையும் பிறையே
பித்தாய் போனேன் பிறைசூடிட...
விரல்தொடும் தூரத்தில் விண்மீனாய்
மின்னினள், இமைஉரசிச் செல்லும்
மின்னலாய் கண்ணினள்.
மனமேகங்களில் வெட்டுக்காயம்
விழிமேகங்களில் மழையின் சாயம்...
கண்களின் கழிமுகத்தில்
கரைந்தே போனேன்.
Comments
Post a Comment