மந்தாரம்

விட்டம் வெறிக்கும் கண்கள்
இமைதள்ளும் விழிநீர்
நொடிதட்டும் கடிகாரக்கூச்சல்
இரவுச்சுவரில் ஊரும் பல்லி
காற்றைக் கடையும் மின்விசிறி
உடன்விழித்திருக்கும் ஒளிவிளக்கு
காதை சுற்றும் கொசுவின் பல்லியம்
கோடைகால கனப்பு.
இரவின் அமைதி மிகவும் சத்தமானது.

முற்றம் தெறிக்கும் சூரியன்
சட்டை உரிக்கும் வைகறை நிலா
கிழக்குக்கடலில் வண்ணான்குளம்
கிழிந்த மேகப்படை
தேனீக்களின் மகரந்த உரசல்
தளிர்களில் பனிச்சறுக்கல்
பட்டை உரிக்கும் கூட்டுப்புழு
பரிதி முத்துக்குளிக்கும் கடலிலே,
பட்டுத் தெறிக்கும் பவளத் துகள்கள்.

மேகப்பின்னல் - மழையின் கூந்தல்
மணற்கிறுக்கும் தூரல்மழை
உள்ளங்கையில் நீர்ப்பூக்கள்
சாளர வாசலில் சாரற் கோலம்
வாசற்கதவிடை சகதிச் சித்திரம்
ஓயாது பெய்த மழையால்
காயாமல் காயும் ஈர ஆடை-
கொடிகளின் மறைவில் கண்ணகிகள்













Comments

Popular Posts