தொட்டில்

காகித கந்தைகளுக்குள் சிக்கி 
வேகிற விரல்களில் வலி மிக அதிகம்.
காதுகள் வழி காற்றின் ஒலி
கரைந்துமே கனக்கும் மனமே!

கானக வெளியில் கிளைதொடும்
காற்றாய் - வானக வெளியில் 
நிலவொளி ஊற்றாய்,
மாறிட ஏங்கும் மனமே!

காலம் பின்னோக்கி ஓடிட
கால்களும் மீண்டும் தவழ்ந்திட - 
என் 
முதல் வார்த்தை மீண்டும் பழகி
தொட்டில் தாலாட்டும் தூக்கம் வேண்டும்.

மொழியில்லா உளறல்கள்,
திரையிடாத அழுகைகள் - அந்த 
ஆட்காட்டி விரல்பிடித்து 
நடைபழகிய பொழுதுகள்.

கன்னக்குழி நிரப்பிய மையுடன்- அந்த
கைகளின் பல்லக்கில் அமர்ந்து
நகர்வலம் போன தருணங்கள் எல்லாம்
நிழல்படங்களாய் கண்முன்னே.

கருவறை அடைந்து கண்மூடியே
இருளை அணைத்துக்கொண்டு
விரல்கள் பிணைத்துகொண்டு 
தூங்கிட ஏங்கும் மனம்.

காலப்படகுடன் எதிர்துடுப்பு 
நான் போடுகிறேன் - சிலநேரம்
கவிதைபேசி 
கான்வழி செல்கிறேன்,
பாதை முடிந்திடாத ஓர் பயணம். 











Comments

Popular Posts