சிறுநண்டு மணல் மீது...
கடல்கொள்ளும் காதல் சுமந்து
கரைநிற்கும் கடல்நண்டு
மணலில் கவிதைக்கிறுக்கல்,
மனதோடு பூட்டிய-தன் மேலோடு.
கால்தடங்களால் கடலுக்கோர்
கடிதம் - அலைகொண்டு
அழித்தழித்து திருத்தியும்
திருப்தி இல்லை அலைமனமே!
ஒரே கடலில் உதித்து மறைந்திட
உதயோனுக்கோர் மனு சேர்க்கும்,
தொடுவானம் துரத்திடும் மேகம்
ஏறியே சூரியன் பறிக்கும் கரைநண்டு.
தொட்டுச்செல்லும் அலைகளிடம்
தூதுவிடும் பத்து விரல்,
விட்டுச் செல்லும் நுரைகளிடம்
தன் காதல்சொல்லும் தனிமைக்குரல்.
நட்சத்திர மழையில் நனைந்திடாமல்
கடலுக்கு குடைபிடிக்கும் கடகக்காதல்,
கண்ணீர் கலந்து கரிக்கும் கடல்மேல்
கலப்படம் ஆகா வரிகள் எழுதிடும்.
பதில் அலை வரும்வரை
பத்துக்காலும் கரையிலில்லை. - உள்
மதில்முட்டி விழும் மனப்பூனை
நகம் கீறிட சிவந்தமணல்.
இன்றுவரை பதிலறியாமலே
கடிதம் எழுதும் நண்டுகள்,
அலைவருடும் ஸ்பரிசம் கொண்டு
கடல்கொள்ளும் காதல் சுமந்து
கரைநிற்கும் கடல்நண்டுகள்...
ஒவ்வொரு முறையும் படிக்கும் பொழுதும், முதல் முறை
ReplyDeleteபடிப்பது போன்ற உணர்வு !
நன்றி🙌
Delete