ஒயிலாடும் விழிகள்
இடர் வரும்பொழுது உடைந்திடும் மனது
இருவிழி உனது இடர்களைந்திடும் பொழுது
கருவிழிக் குளத்தில் கரையும் மீனாய் - உன்
கண்களில் விழும் நட்சத்திர துகளாய் ஆனேன்.
பால்வெளி வெடித்த பரிதிப் பிழம்பாய்
அவள் பார்வை சுட்டிட மனம்பூக்கும் வெம்மை.
நில்லாமல் செல்லும் மேகமோ அவள்?
தூறாமல் செல்லும் தூவானமோ அவள்?
கல்லாகி நின்றேன் கரையாமல் போனாள்,
மழையாகி நின்றேன் நனையாமல் போனாள்.
சிற்பியின் உளிசத்தம் கேட்டும்
சிலைகள் பேசுவதில்லை, புரிந்தது அன்று.
என் வானவீட்டில் கூரைபெயர்த்து
நிலவைக் குடிவைத்தேன்,
என் கனவுக்காட்டில் அவள்பெயர்கோர்த்து
நினைவுப்பாத்தி வைத்தேன்.
மன ஊஞ்சல் ஆடும் மயிலிறகே,
மயிலாடும் மனமுன்றல் இங்கே
ஒயிலாடும் விழியிரண்டும் எங்கே?
Comments
Post a Comment