ராஃபா
புழுதிக்காட்டில் பூத்த மலர்கள்,
பூவின் இதழில் உதிரத் தூரல்கள்,
போரின் நிழலில் ரத்தச் சூடு
நிலத்தின் மீது சிலுவைக்காடு.
இடியும் வீட்டில் சிசுவின் கூடு - உதிர
நெடியின் விரல் தீண்டும் காற்று. - எம்
குழந்தை கிறுக்கிய சுவர்களை
தோட்டாக்கள் துளைத்திருந்தன.
நீர்மழை பொழியும் விழிகளால்,
தீமழை குளித்திருந்த கூடாரங்கள்
நனைந்திருந்தன- காற்றெல்லாம்
எரிகின்ற பிண நாற்றம்.
எரியும் மேகக்கூட்டத்திடை
எரிமலைகள் வந்து விழும் எம்நிலத்தில்,
வெடிகுண்டுகள் சுமந்த காயத்தடம்.
சிவப்புமைதீட்டிய உயிரோவியங்கள்...
பிஞ்சுவிரல் கரங்களில்
போர் சுமந்த தழும்புகள்,
போரழுத்தம் தாங்கும் சிரங்களில்
நெற்றிமுத்தமிட்ட தோட்டாக்கள்.
போர் சென்றவழி முளைக்கும்
புதைகுழிக் காடுகள்,
கொதிக்கும் களங்களில்
குழந்தைகளின் கால்தடங்கள்.
கூடார வாசல்களில் குருதிவாசம்,
குருதிச் சேற்றில் தனியே தவழும்
கைக்குழந்தை கைகள் - பால்வாசம்
மறக்குமுன்னே போர்வாசம் காட்டிவிட்டீர்...
Comments
Post a Comment